Published : 22 Sep 2024 11:44 AM
Last Updated : 22 Sep 2024 11:44 AM
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார்.
இலங்கையின் 9வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசநாயக்க, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 11.20மணி நிலவரப்படி அநுரகுமார திசநாயக்க(வயது56) 20 லட்சத்து 77 ஆயிரத்து 761 வாக்குகள் (40.08%) பெற்று முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து சஜித் பிரேமதாச 17 லட்சத்து 7 ஆயிரத்து 429 வாக்குகள் ( 32.94%) பெற்று இரண்டாம் இடமும், 9 லட்சத்து ஆயிரத்து 632 வாக்குகளுடன் ரணில் விக்ரமசிங்கே 3வது இடமும் வகிக்கின்றனர்.
அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 859 வாக்குகளுடன் 4ம் இடமும், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 163 வாக்குகளுடன் நமல் ராஜபக்ச 5வது இடமும் பெற்றுள்ளனர்.
மிகப் பெரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து, அடுத்த அதிபராக தங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் அநுரகுமார திஸாநாயக்க, அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரை மக்களால் தேர்வு செய்யப்படாத அதிபரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒருமுறை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து, அவருக்குப் பதில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றார். இதுவே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜபக்சக்களை காப்பாற்றியதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததாக தென்னிலங்கை மக்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT