Published : 21 Sep 2024 06:00 PM
Last Updated : 21 Sep 2024 06:00 PM
டெல் அவில்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியத் தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இவரைத் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரது இழப்பு ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 66 பேர் பயங்கரமாக காயமடைந்தனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியத் தளபதி இப்ராஹிம் அகிலும் (வயது 61) கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா படையின் எலை ராட்வான் பிரிவின் (Radwan forces) தலைவராக இப்ராஹிம் செயல்பட்டு வந்தார். இவரை அமெரிக்காவும் தேடிவந்ததாகச் சொல்லப்படுகிறது.
இப்ராஹிம் அகில் உயிரிழந்ததை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உளவுத் துறை தகவலின்படி பெய்ரூட்டில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் எலைட் ராட்வான் படையின் முக்கியத் தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். இவருடன் இந்தப் படையில் உள்ள மேலும் சிலரும் இறந்துள்ளனர்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
யார் இந்த இப்ராஹிம் அகில்?: 1980-களில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்தவர் இப்ராஹிம் அகில். 1980-ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய மக்கள் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். அதில் இப்ராஹிம் அகிலுக்கு தொடர்பு இருந்தது எனச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 1983-ஆம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் இப்ராஹிம் அகிலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதனால், இப்ராஹிம் அகிலை பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை கொடுக்கப்படும் என அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இந்தச் சூழலில் இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை லெபனானில் ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியது. இதில் ஹிஸ்புல்லாவின் 100 ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் 1,000 ராக்கெட் பேரல்கள் அழிக்கப்பட்டன. ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டன.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தயாராகி வந்தனர். இதை தடுக்க அவர்களின் ஏவுகணை தளங்கள்,ஆயுத கிடங்குகளை முழுமையாக அழித்துள்ளோம்” என்று தெரிவித்தன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று கூறும்போது, “இஸ்ரேல் வரம்பு மீறி செயல்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் லெபனான் மண்ணில் கால் வைத்தால் மிகப் பெரிய போர் வெடிக்கும்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT