Published : 21 Sep 2024 01:10 PM
Last Updated : 21 Sep 2024 01:10 PM

இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச

நமல் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானது என்று இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இலங்கை அதிபர் 2024 தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய அவர், மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் வாக்களித்துவிட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் எழுதியுள்ள பதிவில், "நாங்கள் வாக்களித்து விட்டோம். இப்போது உங்கள் முறை - வீட்டிலிருந்து கிளம்பிச்சென்று உங்களுடைய குரலை ஒலிக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு வாக்கும் இலங்கையின் எதிர்காலத்துக்கு முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019-ல்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்பஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இலங்கையின் 10-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். அவருக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு உள்ளது. மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், இரவு 7 மணி முதல்வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.இலங்கையின் புதிய அதிபர் யார்என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x