Last Updated : 26 Jun, 2018 09:23 PM

 

Published : 26 Jun 2018 09:23 PM
Last Updated : 26 Jun 2018 09:23 PM

அதிபர் டிரம்புக்கு வெற்றி; முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விதித்த தடை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் வர அதிபர் டெனால்ட் டிரம்ப் விதித்த தடை செல்லும், அதற்கு தடை விதிக்க முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் , தான் அதிபராக வந்தால், முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்குத் தடைவிதிப்பேன், தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று கூறி இருந்தார்.

அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாட், ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சிரியா, வெனிசுலா, மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்தார்.

ஆனால், இந்தத் தடைக்கு எதிராக ஹவாய் மாநில அரசு உள்ளிட்ட பலர் கீழ் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அமெரிக்க குடியேற்றச் சட்டப்படி அதிபர் தடைவிதிக்க அதிகாரம் இல்லை என்று கீழ்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அளித்த தீர்ப்பில், அமெரிக்க அரசு நாட்டின் பாதுகாப்பில் காட்டிய அக்கறை நியாயமானதுதான். அரசின் கொள்கையில் எந்தவிதமான எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே 8 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் நாடுகளை அதிபர் டிரம்ப் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க இப்படிப்பட்ட தடை தேவை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x