Published : 19 Sep 2024 09:26 AM
Last Updated : 19 Sep 2024 09:26 AM

லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலி, 3,250 பேர் காயம்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்த நிலையில் அவற்றில் ஒன்று முந்தைய நாள் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வின் போது வெடித்தது கவனிக்கத்தக்கது.

பேஜர், வாக்கி-டாக்கி என அடுத்தடுத்து தாக்குதல்கள் நடக்க இஸ்ரேல் தான் காரணம் இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என லெபனான் கூறி வரும் நிலையில் இது குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்து வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வழக்கொழிந்த பழைய தொழில்நுட்ப சாதனங்களான பேஜர்கள், வாக்கி டாக்கிகளை பயன்படுத்திவரும் நிலையில் இந்த மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.

இந்த வாக்கி டாக்கிகள் அனைத்துமே 5 மாதங்களுக்கு முன்னர் வாங்கப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் தான் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய பேஜர்களும் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய பேஜர்கள் அனைத்தும் தைவான் தயாரிப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் தைவான் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக பல்வேறு பிரபல ஊடகச் செய்திகளும் குறிப்பிடுகிறது.

ஏற்கெனவே இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், பேஜர், வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறிய சம்பவம் இஸ்ரேல் - ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாக்கள் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச போர் நிலவர நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இஸ்ரேல் - லெபனான் மோதல் ஏன்? சுதந்திரப் போரின் தொடக்கத்தில் (1948), லெபனான் இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சினையை உருவாக்கியது. இந்தப் போரில் லெபனான் ராணுவம் அரபுப் படைகளுக்கு ஆதரவளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) உருவாக்கப்பட்டு லெபனானில் போராளிகளை பணியில் அமர்த்தியதும் பிரச்சினை மேலும் தீவிரமானது.

தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தலாக 1982-ல் ஈரானின் புரட்சிகரக் காவலர்களால் ஹிஸ்புல்லா படை லெபனான் மண்ணில் நிறுவப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற இந்தப் படை வழிவகுத்தது. ஹிஸ்புல்லாக்களின் கொரில்லா தாக்குதல்கள் உலகமே கண்டு அஞ்சிய தாக்குதல் உத்தியாக பிரபலமானது. அப்போது தொடங்கி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இந்த ஹிஸ்புல்லாக்கள் இருக்கின்றனர்.

“பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் தன்னை ஒரு நாடாக நிறுவிக்கொண்டது. அது ஒரு சட்டவிரோத நாடு. இஸ்ரேல் இல்லாத அரபு பிராந்தியம் வேண்டும்.” என ஹிஸ்புல்லா விரும்புகிறது. இதனால் அவ்வப்போது இஸ்ரேல் - ஹிஸ்புல்லாக்களுக்கு இடையே மோதல்கள், தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகிவருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இந்நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் அரங்கேறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x