Published : 18 Sep 2024 11:12 PM
Last Updated : 18 Sep 2024 11:12 PM

பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி

பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர்கள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று அதே பாணியில் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (செப்.17) பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர். 12 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்தும் இந்த பேஜர்களில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இவை அதிக சூடானால் வெடித்துச் சிதறும். இஸ்ரேல் உளவுத் துறை, சைபர் தாக்குதல் மூலம் இந்த பேட்டரிகளை அதிக சூடாக்கி வெடித்துச் சிதறச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், நேற்றைய சம்பவத்தின் பரபரப்பு அங்கு அடங்குவதற்குள்ளாகவே இன்று லெபனானின் பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன. நாட்டின் தெற்கு பகுதியிலும், பெய்ரூட் நகரின் புறநகர் பகுதிகளிலும் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வாகனங்களுக்குள் இருந்த வாக்கி டாக்கி கருவிகள் வெடித்ததால் வாகனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாக்கி டாக்கி கருவிகளும், நேற்று வெடித்துச் சிதறிய பேஜர்கள் வாங்கப்பட்ட அதே காலகட்டத்தில், அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பாக வாங்கப்பட்டதாக தெரிகிறது. எனவே இந்த சம்பவத்திலும் இஸ்ரேலின் தலையீடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார். இதன்பிறகு இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், செல்போன்களை பயன்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக பழங்கால பேஜரை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்தும் பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x