Published : 17 Sep 2024 05:52 PM
Last Updated : 17 Sep 2024 05:52 PM

இஸ்ரேல் தாக்குதல்: காசா, வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000+ மாணவர்கள் உயிரிழப்பு

கோப்புப் படம்

டெல் அவில்: இஸ்ரேலிய தாக்குதல்களில் காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய காசாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 41,252 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 95,497 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது, அதேசமயம் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அக்டோபர் 7-ல் இருந்து இதுவரை காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் 11,001 மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,772 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் எகிப்துக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவர், காசாவில் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் பற்றி விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது. காசாவில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்றும் காசாவுக்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், சில தொழிலாளர்கள் பிழைப்புக்காக விவசாயத்திற்குத் திரும்பியுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x