Published : 17 Sep 2024 04:29 PM
Last Updated : 17 Sep 2024 04:29 PM

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த எலான் மஸ்க்கின் பதிவு - வெள்ளை மாளிகை கண்டனம்

எலான் மஸ்க்

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து இரண்டு கொலை முயற்சிகள் அரங்கேறி உள்ளது. இந்த சூழலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கொலை முயற்சியை எதிர்கொள்ளாதது ஏன் என்று டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அவரது இந்த பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதனை தான் வேடிக்கையாக சொன்னதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்த பதிவு முற்றிலும் பொறுப்பற்றது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவில் கோல்ஃப் பயிற்சி மேற்கொண்ட போது அவரை கொலை செய்ய ஒருவர் முயற்சித்தார். இருப்பினும் இதில் தப்பிய ட்ரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு சென்றார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவின் பட்லரில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார்.

“யாரும் பைடன் அல்லது கமலா ஹாரிஸை கொலை செய்ய முயற்சிக்கவில்லை” என மஸ்க் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதனை நீக்கி இருந்தார். அதோடு இதனை தான் வேடிக்கையாக சொன்னதாக தெரிவித்தார்.

நேற்றைய சம்பவத்துக்கு பிறகு, "அமெரிக்க நாட்டில் எந்த விதமான வன்முறைக்கும் அறவே இடமில்லை என அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நாட்டில் வன்முறையை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. வன்முறை கண்டிக்கத்தக்கது. அதனை ஒருபோதும் ஊக்குவிக்கவோ, கேலி செய்யவோ கூடாது" என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரு பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x