Published : 16 Sep 2024 09:28 AM
Last Updated : 16 Sep 2024 09:28 AM
ஃப்ளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இந்தமுறை காயமேதுமின்றி ட்ரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ட்ர்ம்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிறு மாலை ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து 4 ரவுண்ட் துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டது. உடனடியாக ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கிக் குண்டுகள் வந்த திசையை நோக்கி தாக்குதலைத் தொடங்கினர். உடனே அங்கிருந்த மர்ம நபர் தான் கொண்டுவந்த உடைமைகளை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து காரில் தப்பியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப்பின் பாதுகாப்புக்கான ரகசிய சேவை ஏஜன்ட் கூறுகையில், “ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஒன்றை கொண்டுவந்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பையில் தூரத்தில் இருப்பதை துல்லியமாகக் காணும் ஸ்கோப் ஒன்றும் இருந்தது. அந்த நபர் காரில் தப்பியதை நேரில் கண்ட நபர் எடுத்த புகைப்படத்தில் அவரது வாகன எண் பதிவாகி இருந்தது. அதைவைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. அவர் 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயினும், துப்பாக்கிச் சூடு நோக்கம் குறித்து ஏதும் தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு ‘படுகொலை முயற்சி’ வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அமெரிக்காவில் எந்தவிதமான அரசியல் வன்முறைக்கும் இடமில்லை. ட்ரம்ப் நலமுடன் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. ட்ரம்ப் தாக்குதல் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment