Published : 11 Sep 2024 09:19 PM
Last Updated : 11 Sep 2024 09:19 PM

ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ் - அனல் தெறித்த நேரடி விவாதத்தில் ‘வெற்றியாளர்’ யார்?

பென்சில்வேனியா: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகியோர் முதல் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ் தான் என்பதை பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேராக விவாதம் மேற்கொள்வது மரபு. அந்த வகையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இன்று (செப்.11) இந்திய நேரப்படி காலை 7 மணி அளவில் விவாதம் மேற்கொண்டனர். இதில் இருவரும் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசினர். அமெரிக்க நாட்டின் பொருளாதாரம், குடியேற்றக் கொள்கை, உலக நாடுகளில் நிலவும் போர் குறித்தும் பேசி இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடனும், ட்ரம்ப் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருந்தார். இருவரும் பொதுவெளியில் பேசிய விஷயங்களை குறிப்பிட்டு நெறியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். விவாதத்துக்கு பிறகு இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களின் வாதம் அருமை என தெரிவித்தனர்.

‘அமெரிக்க தேசத்தை கருத்தில் கொண்டு ட்ரம்பின் பேச்சு இருந்தது’, ‘மேடையில் கமலா ஹாரிஸ் முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இந்த விவாதத்துக்கு சிறந்த முறையில் அவர் தயாராகி இருந்தார். மேலும், பதில்களையும் தெளிவாக எடுத்துவைத்தார்’, ‘ட்ரம்ப் நிறைய வாய்ப்புகளை மிஸ் செய்தார். அவர் கொஞ்சம் அமைதி காத்திருக்கலாம்’, ‘கமலா ஹாரிஸ், தான் என்ன பேச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்’...

‘சென்சிட்டிவ் தலைப்புகளில் கமலா ஹாரிஸ் பேசி இருந்தார். குடும்பம், முன்னேற்றம், உழைக்கும் வர்க்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி அவர் பேசி இருந்தார்’, ‘விவாதம் முழுவதும் கமலா ஹாரிஸ் நம்பிக்கையுடன் காட்சி அளித்தார்’, ‘ட்ரம்ப் இதற்கு தன்னை தயார் செய்து கொள்ளாதது போல இருந்தது’ என பொதுவான வாக்காளர்கள், அரசியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதத்தில் வென்றது யார் என அமெரிக்க ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும் அதிக சதவீதத்தை கமலா ஹாரிஸ் பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது.

அனல் பறந்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்: முன்னதாக, இந்த விவாதத்தைத் தொடங்கிய ஜ்னநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், “ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் ட்ரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. ஆனால் நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும்” என்றார்.

“கமலா ஹாரிஸ்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார். இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என்று ட்ரம்ப் சாடினார்.

அப்போது, “ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைத் திருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார்” என்று பதிலடி கொடுத்தார் கமலா ஹாரிஸ்.

கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், “ட்ரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகிவிடும். அதனால் ட்ரம்ப்பை ஆதரிக்கக் கூடாது” என்றார் கமலா ஹாரிஸ்.

அப்போது ட்ரம்ப், “சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது” என்றார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர், அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். உடனே, “கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் ட்ரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள்” என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x