Published : 11 Sep 2024 05:36 PM
Last Updated : 11 Sep 2024 05:36 PM
வாஷிங்டன்: இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தியின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து குருபத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, காலிஸ்தான் அமைப்பின் பிரச்சாரத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். ‘இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை மற்றும் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா? குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?’ என ராகுல் கூறி இருந்தார்.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியது துணிச்சல் மிக்க உரை மட்டுமல்ல. அது கடந்த 1947 முதல் இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும், சீக்கியர்களுக்காக காலிஸ்தான் தேசத்தின் கோரிக்கைக்கான நோக்கத்தையும் உரக்கச் சொல்கிறது” என்று பன்னுன் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையைப் பெற்றவர். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெர்ஜினியாவில் புலம் பெயர்ந்தஇந்தியர்களுடன் உரையாடும்போது, “இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே” என்றார்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறும்போது, “3,000 சீக்கியர் படுகொலை: டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் தலைப்பாகை அகற்றப்பட்டது. தலைமுடி வெட்டப்பட்டது. தாடி மழிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இதெல்லாம் நிகழ்ந்தது பற்றி ராகுல் கூறவில்லை. சீக்கியர்கள் பற்றி அமெரிக்காவில் கூறியதை இந்தியாவில் மீண்டும் கூற முடியுமா என ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். ராகுல் அவ்வாறு கூறினால், அவர் மீது வழக்கு தொடர்வேன். அவரை நீதிமன்றத்துக்கு இழுப்பேன்” இவ்வாறு ஆர்.பி.சிங் கூறினார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புள்ள பதவியில் ராகுல் இருக்கிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் வெளிநாட்டில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கமுயன்றதில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சிந்தனைகள் ராகுல் மனதில் வேரூன்றியுள்ளன. இதனால் இந்தியாவின் நற்பெயரை அவர் கெடுக்க முயன்று வருகிறார்” என்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...