Published : 10 Sep 2024 06:50 PM
Last Updated : 10 Sep 2024 06:50 PM

ரஷ்யாவும் உக்ரைனும் விரும்பினால் ஆலோசனை வழங்கத் தயார்: இந்தியா

பெர்லின் (ஜெர்மனி): மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தின் வருடாந்திர தூதர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட எஸ் ஜெய்சங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஷ்யா - உக்ரைன் மோதல், குவாட் அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில், பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் அந்த பேச்சுவார்த்தையில் இருக்க வேண்டும்.

போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்புக்கு எதிராக சீனா செயல்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், QUAD-ல் இந்தியா உறுப்பினராக உள்ளது. குவாட்டை ஒரு கூட்டணியாக சீனா கருதுகிறது. அதன் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடுமையாக விமர்சிக்கிறது. நாங்கள் குவாட் அமைப்பால் புத்துயிர் பெற்றுள்ளோம். இது ஒரு முக்கிய ராஜதந்திர தளம். இந்தியா இதற்கு உறுதிபூண்டுள்ளது" என்று கூறினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய அளவில் மாறிவிட்டது. மேலும் இது இன்று கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ளது. இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு 8% வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதனிடையே, ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். | வாசிக்க > உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x