Published : 09 Sep 2024 09:29 AM
Last Updated : 09 Sep 2024 09:29 AM
டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக பாஜக மீது, நரேந்திர மோடி இருந்த அச்சம் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, டல்லாஸ் நகரில் இந்தியர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, பணிவு ஆகிய மதிப்புகளை புகுத்துவது எதிர்க்கட்சித் தலைவராக எனது பங்கு என நான் நம்புகிறேன். அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை எந்த கட்சியிலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து நான் என்னை வெற்றிபெற்ற ஒருவராக பார்ப்பேனா என்று கேட்டால், அன்பு என்ற கருத்தை இந்திய அரசியலில் முன்னணியில் கொண்டு வர நான் உதவியிருக்கிறேனா? நான் உட்பட அரசியல்வாதிகளை இன்னும் பணிவு கொண்டவர்களாக ஆக்கிவிட்டேனா? இந்திய மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையை நான் அதிகரித்திருக்கிறேனா? என்ற மூன்று விஷயங்களால் நான் அதனை அளவிடுவேன்.
இந்தியா என்பது ஒற்றை கருத்து என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா என்பது பல கருத்துக்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சாதி, மொழி, மதம், பாரம்பரியம் அல்லது வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும், கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் முரண்; சண்டை.
நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்பு. இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டபோது, இந்த சண்டை தேர்தலில் எதிரொலித்தது. நான் அரசியல் சாசனத்தை முன்வைத்தபோது, நான் சொல்வதை மக்கள் புரிந்துகொண்டார்கள். பாஜக நமது பாரம்பரியத்தை தாக்குகிறது, நமது மொழியை தாக்குகிறது, நமது மாநிலங்களை தாக்குகிறது, நமது வரலாறுகளை தாக்குகிறது என்று அவர்களும் கூறினர்.
மிக முக்கியமாக, அவர்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், இந்திய அரசியலமைப்பைத் தாக்கும் எவரும் நமது மத பாரம்பரியத்தையும் தாக்குகிறார்கள் என்பதுதான். அதனால்தான், நான் அச்சமின்மையைப் பற்றி நான் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் பேசும்போது, அபயமுத்திரை என்பது அச்சமின்மையின் அடையாளம் என்பதையும், ஒவ்வொரு இந்திய மதத்திலும் இது உள்ளது என்பதையும் குறிப்பிட்டேன். நீங்கள் இதை கவனித்திருப்பீர்கள்.
தேர்தல் முடிவு வந்த சில நிமிடங்களிலேயே, இந்தியாவில் பாஜகவைக் கண்டும், இந்தியப் பிரதமரைக் கண்டும் யாரும் பயப்படவில்லை என்பதை நாம் பார்த்தோம். எனவே இவை மிகப்பெரிய சாதனைகள். இந்த சாதனைக்கு ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ காரணம் அல்ல. ஜனநாயகத்தை உணர்ந்த, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாம் ஏற்கப் போவதில்லை என்பதை உணர்ந்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள் இவை. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...