Published : 05 Sep 2024 06:58 PM
Last Updated : 05 Sep 2024 06:58 PM

“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” - வங்கதேச தலைமை ஆலோசகர்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு அரசியல் கருத்துகளை வெளியிடுவது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும். ஷேக் ஹசீனாவை, வங்கதேசத்துக்கு நாடு கடத்தக் கோரும் வரை, அவரை தங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கும் இடையே அசவுகரியம் ஏற்படாமல் இருக்க அவர் அமைதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த யூனுஸ், "எல்லோரும் இதை புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஷேக் ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாகச் சொன்னோம். அவர் அமைதியாக இல்லாவிட்டால் அது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும். இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. அங்கிருந்து கொண்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் சாதாரணமாக இந்தியா செல்லவில்லை. மக்களின் எழுச்சி மற்றும் கோபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார் ”என்று கூறினார்.

ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்துக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த யூனுஸ், “ஆம், அவர் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும், இல்லையெனில் வங்கதேச மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஷேக் ஹசீனா செய்த அட்டூழியங்கள், இங்குள்ள அனைவர் முன்னிலையிலும் விசாரிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தியா-வங்கதேச உறவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முகம்மது யூனுஸ், "இந்தியாவுடன் நல்லுறவு இருப்பதை வங்கதேசம் விரும்புகிறது. ஆனால், ஷேக் ஹசீனாவின் தலைமைதான் வங்கதேசத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது என்ற கதையை புதுடெல்லி கைவிட வேண்டும். இந்த கதையிலிருந்து வெளியே வருவதே முன்னோக்கி செல்லும் வழி.

ஷேக் ஹசீனாவைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாமிய மதவாதிகள், வங்கதேச தேசிய கட்சி (BNP) மதவாத கட்சி, அவர்கள் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தானாக மாற்றுவார்கள், ஷேக் ஹசீனா தலைமையில் மட்டுமே வங்கதேசம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது போன்ற கதைகளால் இந்தியா ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதையிலிருந்து இந்தியா வெளிவர வேண்டும். வங்கதேசம் மற்ற தேசங்களைப் போலவே மற்றொரு அண்டை நாடு” என தெரிவித்தார்.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முகம்மது யூனுஸ், "சிறுபான்மையினரின் நிலைமைகளை இவ்வளவு பெரிய அளவில் சித்தரிக்க முயற்சிப்பது ஒரு சாக்குப்போக்கு. இந்த விவகாரம் மிகைப்படுத்தப்பட்டுவிட்டது" என்று கூறினார்.

இந்திய - வங்கதேச உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முகம்மது யூனுஸ், ​​"இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். உறவை மேம்படுத்த நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது குறைந்த நிலையில் உள்ளது" என்று கூறினார்.

இந்தியாவுடனான இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்காலம் குறித்து பேசிய யூனுஸ், "போக்குவரத்து மற்றும் அதானி மின்சார ஒப்பந்தம் போன்ற சில ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. அது தேவை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது, உண்மையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆராய்வோம். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அது குறித்து எழுப்புவோம்'' என தெரிவித்தார்.

முன்னதாக, வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி டாக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 13ம் தேதி ஹசீனா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், அவர் தனக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாத செயல்கள், கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x