Published : 05 Sep 2024 04:20 PM
Last Updated : 05 Sep 2024 04:20 PM

“ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” - புதின்

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் கேள்வி பதில் அமர்வில் பேசிய விளாடிமிர் புதின், “ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா என்று கேட்டால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே 2022-ம் ஆண்டில் ரஷ்யாவும் உக்ரைனும் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதன் காரணமாக, ஒப்பந்தத்தின் விளிம்பில் இருப்பதாக ரஷ்யா பலமுறை கூறியது.

“நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்ட முடிந்தது. அதுதான் மையப் புள்ளி. இந்த ஆவணத்தை துவக்கிய உக்ரேனிய தூதுக்குழுவின் தலைவரின் கையொப்பம் இதற்கு சாட்சியமளிக்கிறது. அதாவது, எட்டப்பட்ட ஒப்பந்தங்களில் உக்ரேனிய தரப்பு திருப்தி அடைந்துள்ளது. ஆனால், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் உயர் தலைவர்களின் குறுக்கீடு காரணமாகவே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. ரஷ்யா தோல்வி அடைய வேண்டும் என அவர்கள் விரும்பியதால், ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே அது நடைமுறைக்கு வரவில்லை” என்று ரஷ்ய அதிபர் கூறினார்.

ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்றும் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புதினின் இந்த கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் மாஸ்கோ மற்றும் கீவ் பயணத்தைத் தொடர்ந்து வெளியாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x