Published : 04 Sep 2024 12:53 PM
Last Updated : 04 Sep 2024 12:53 PM

“புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது” - சுல்தானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமர் மோடி பதிவு

புருனே சுல்தானுடன் பிரதமர் மோடி

பந்தர் செரி பேகவான்(புருனே): புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய் கிழமை) புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுவினருடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் அன்பான வார்த்தைகள், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்காக உங்களுக்கும் முழு அரச குடும்பத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களுக்கும் புருனே நாட்டு மக்களுக்கும் 40வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்பின் அடிப்படையே நமது பண்பாட்டு பாரம்பரியம்தான்.

நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறோம். எனது வருகையும் கலந்துரையாடல்களும் எதிர்வரும் காலங்களில் எமது உறவுகளுக்கு நலம் பயக்கும் வழிகாட்டலை வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், “சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்த பேச்சுவார்த்தை உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தக உறவுகள், வர்த்தக தொடர்புகள், மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.

எனது புருனே வருகை பயனுள்ளதாக இருந்தது. இன்னும் வலுவான இந்தியா-புருனே உறவுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. நமது நட்பு, ஒரு சிறந்த உலகிற்கு பங்களிக்கும். புருனேயின் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் விருந்தோம்பல் மற்றும் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் புறப்பட்டார்.

அரசுமுறை பயணமாக நேற்று புருனே சென்ற பிரதமர் மோடியை, பட்டத்து இளவரசர் அல்-முஹ்ததீ பில்லா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அங்குள்ள உமர் அலி சைபுதீன் மசூதிக்குச் சென்ற பிரமதர் மோடி, அதனைத் தொடர்ந்து புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x