Published : 02 Sep 2024 03:49 PM
Last Updated : 02 Sep 2024 03:49 PM

காசாவில் 6 பிணைக்கைதிகள் கொலை எதிரொலி - எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம்

டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டம் | நாள்: 02.09.2024

டெல் அவிவ்: காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிணைக்கைதிகளில் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றனர். அவர்களின் உடல்களை இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் நேற்றும், இன்றும் (ஞாயிறு, திங்கள் கிழமைகள்) பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பிணைக்கைதிகள் உயிரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு என்றும் கூறி லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருசலேமில், போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பிணைக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று (செப்.2) அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும், இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றும் எஞ்சிய பிணைகைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிணைக்கைதிகளின் குடும்பங்களுக்கான அமைப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக கண்டித்துள்ளது. “பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் கடந்த 11 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக 40,738 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இல்லாததாலும், உணவு போதிய அளவில் கிடைக்காததாலும் அவர்கள் கடும் நெருக்கடியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x