Published : 28 Aug 2024 06:25 PM
Last Updated : 28 Aug 2024 06:25 PM
ஜெருசலேம்: இஸ்ரேல் காசா போருக்கு காரணமான அக்டோர் 7 தாக்குதலின்போது கடத்தப்பட்ட பிணைக்கைதி ஒருவரை காசாவின் நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
போர் தொடங்கி 10 மாதங்களுக்கு பின்பு ஒருவர் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், போர் நிறுத்தத்துக்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், இன்னும் 12-க்கும் மேற்பட்டோர் காசாவில் பிணைக் கைதியாக இருப்பது வலி மிகுந்த நினைவூட்டலாகவே இருக்கிறது.
பிணைக் கைதியின் விடுவிப்புக் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், "தெற்கு காசா பகுதியில் நடந்த ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, அங்குள்ள நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து கைத் ஃபர்கான் அல்காதி என்பவர் மீட்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது யாராவது கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் இருந்த கடத்தப்பட்ட அரபு பெடோயின் சிறுபான்மையினர் 8 பேரில் அல்காதியும் ஒருவர். இவர், தாக்குதலுக்கு உள்ளான பல்வேறு விவசாய சமூகங்களில் ஒன்றான கிப்புட்ஸ் மாகானில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள், 11 குழந்தைகள் உள்ளனர். காசாவிடமிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 8 பிணைக்கைதிகளில் 52 அல்காதியும் ஒருவர், அதேநேரத்தில் நிலத்தடி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட முதல் நபர் இவர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்புக்கு பின்பு அல்காதியின் செயல்களை காட்டும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் அவர், சவரம் செய்யப்படாத முகத்துடன் ஒரு வெள்ளை அங்கி அணிந்திருக்கிறார். பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களுடன் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார்.
அல்காதியைப் பார்க்க அவரது பெரிய குடும்பத்தினர் மற்றும் அவர் வசிக்கும் ரஹாத் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பலர் பீர்ஷேபா மருத்துவமனையில் திரண்டிருந்தனர். அப்போது அல்காதியின் சகோதரர் ஒருவர், அல்காதியின் கைக் குழந்தை ஒன்றை கைகளில் வைத்திருந்தார். அவர் பிணைக் கைதியாக இருக்கும்போது அந்தக்குழந்தை பிறந்தது.
அக்குழந்தை இன்னும் தனது தந்தையைப் பார்க்கவில்லை என்று அவரது தம்பி தெரிவித்தார். மற்றொரு குடும்ப உறுப்பினர் கூறும்போது, "நாங்கள் அனைவரும் அவரைக் காண, தழுவிக்கொள்ள, நாங்கள் அனைவரும் உனக்காக இங்கே உன்னுடன் இருக்கிறோம் என்றுச் சொல்ல ஆவலுடன் இருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT