Published : 28 Aug 2024 10:14 AM
Last Updated : 28 Aug 2024 10:14 AM

அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் - டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்தார். அதன் பின்னர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில்தான் பென்சில்வேனியாவில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் விவாத நிகழ்வில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்க உள்ளனர்.

“தோழர் கமலா ஹாரிஸ் உடன் நான் விவாத நிகழ்வில் பங்கேற்கிறேன். சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்த விவாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அதே விதிமுறைகள் இதிலும் இருக்கும். முன்கூட்டியே எழுதி கொண்டு வரும் குறிப்புகள் போன்றவற்றுக்கு இதில் அனுமதி இல்லை. நியாயமான முறையில் இந்த விவாதம் நடைபெறும் என ஏபிசி எங்களிடம் உத்தரவாதம் அளித்துள்ளது” என ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x