Published : 27 Aug 2024 11:00 AM
Last Updated : 27 Aug 2024 11:00 AM

விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ரஷ்ய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், அப்பாவி மக்கள் பலரும் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘மிக மோசமான தாக்குதல்’ எனக் கண்டித்துள்ளார்.

2022 தொடங்கி.. ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. இதில், 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகள் தரையில் விழுந்ததில், 10 கார்கள் சேத மடைந்தன. இதனையடுத்து உக்ரைனுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் நேற்றிரவு (திங்கள்கிழமை இரவு) ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தக்குதல் நடத்தியது. ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கியது. அதனைத் தொடர்ந்து க்ரூயிஸ் மற்றும் பேலிஸ்ட்க் ஏவுகணைகள் உக்ரைனின் பல பகுதிகளையும் தாக்கியது. இதனை உக்ரைன் நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனின் 15 பகுதிகள் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவின் முந்தைய தாக்குதல்களைப் போலவே இதுவும் மிக மோசமானது. பொதுமக்கள் குடியிருப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நாட்டின் பரவலாக பல பகுதிகளும் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

கீவ் நகர மேயர் விடாலி கிட்ஸ்ச்கோ கூறுகையில், “தலைநகர் கீவில் பல இடங்களை ஏவுகணைகள் துளைத்தன. நகரில் குடிநீர் சேவைகளும், மின்சார சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

“ரஷ்யா இதுபோன்று தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க ரஷ்யா எங்கிருந்து ஏவுகணைகளை செலுத்துகிறதோ அந்த இடத்தைத் தகர்க்க வேண்டும். இதில் எங்களின் கூட்டாளிகள் எங்களுக்கு உதவ வேண்டும். ரஷ்யா இந்தத் தாக்குதல்களுக்கு நிச்சயமாக பெரிய விலை கொடுக்கும்.” என்று உக்ரைன் சூளுரைத்துள்ளது.

அமெரிக்காவின் அறிவிப்பு: ரஷ்ய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர், “உக்ரைன் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது சீண்டிப் பார்க்கும் செயல். நான் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு தளவாடங்களை அனுப்பிவைப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளேன். மேலும், உக்ரைன் அதன் எரிசக்தி உட்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கும், தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை சீரமைக்கவும் உக்ரைனுக்கு எரிசக்தி உபகரணங்களை வழங்குவோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடக்கும் போர் மீண்டும் உக்கிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

பரவலாக பாதிப்பு: ரஷ்யாவின் இரவு நேர தாக்குதலில் லுட்ஸ்க், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், ஸைடோமிர், மற்றும் ஜாபோரோஜியா பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர். கீவ், லுட்ஸ்க், மிக்கோலைவ், ஒடேசா, ரிவைன் பகுதிகளில் பலரும் காயமடைந்துள்ளனர். சுமி பகுதியில் 194 இடங்களில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலை அடுத்து உக்ரைனின் அண்டைநாடான போலாந்தில் வான்வழி பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு: தங்கள் மீதான ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை கண்டித்துள்ள அதேவேளையில் திங்கள்கிழமை இரவில் உக்ரைனும் தங்கள் நாட்டின் மீது ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 22 உக்ரைன் ட்ரோன்கள் ரஷ்யாவை நோக்கி அனுப்பப்பட்டதாகவும் அவற்றை ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா மோதல் மீண்டும் வலுத்துள்ள நிலையில் உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படுவிடக் கூடாது என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ராஸி கவலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x