Published : 26 Aug 2024 10:38 AM
Last Updated : 26 Aug 2024 10:38 AM
சிட்னி: பணி நேரம் முடிந்தபின்னர் ஊழியர்கள் தங்கள் அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளை ஏற்கத் தேவையில்லை. அலுவலக இமெயில், குறுந்தகவல்களையும் பார்க்காவிட்டால் குற்றமில்லை. அவ்வாறு செய்வது நியாயமற்றது என்று கருதும்வரை என்ற சட்டபூர்வ உரிமையை மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகப் பார்க்கப்படும் அதேவேளையில் பல்வேறு வாதங்களுக்கும் வழி வகுத்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் ஊழியர்கள் ரிமோட்டில் (அலுவலகம் வராமல்) இருந்து வேலை செய்யும் போக்கு அதிகரித்துள்ள சூழலில் பணியாளர்களின் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை இடையேயான எல்லையில் சில புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கு தீர்வாக ஆஸ்திரேலியா அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஆளும் இடதுசாரி தொழிலாளர் கட்சி இது தொழிலாளர் நல சட்டத்தில் ஒரு முக்கிய சீர்திருத்தமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தில் ஊழியர்கள் நியமனத்தில் புதிய விதிகளையும் அரசு புகுத்தியுள்ளது. மேலும், டெலிவரி தொழில் செய்யும் வாகன ஓட்டிகளுக்கான ஊதிய வரம்புகளை வகுத்துள்ளது.
ஊழியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிடும் பொன்னான நேரத்தில் பணியிட அழைப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்க வழிவகுத்துள்ளது என்ற பரவலான பாராட்டை இந்தச் சட்டம் பெற்று வருகிறது.
இந்த புதிய சட்டத்தை மீறும் நிறுவனங்கள் நாட்டின் தொழிலாளர் நல ஆணையத்தில் சார்பில் விதிக்கப்படும் 93,900 ஆஸ்திரேலிய டாலரை செலுத்த நேரிடும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
முன்னதாக, இந்த சட்ட முன்வடிவை கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அளித்த ஊடகப் பேட்டியில், “24 மணி நேரத்துக்கும் ஊதியம் வழங்கப்படாத ஒரு ஊழியர் 24 மணி நேரமும் அலுவலகத் தொடர்பில் இல்லாமல் போவதற்காக தண்டிக்கப்பட முடியாது என்பதையே நாங்கள் எளிமையாக முன்வைக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இதுபோன்ற சட்டத்தை கொண்டுவருவதில் ஆஸ்திரேலியாவுக்கு சில முன்னோடிகள் இருக்கின்றன. கடந்த 2017-ல் பிரான்ஸ் பணியாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து பணி நேரத்துக்குப் பின்னர் ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அழைப்புகளை ஏற்காவிட்டால் தண்டிக்கப்படுவதை தடுத்தது. இதேபோன்ற சட்டங்களை ஜெர்மனி, இத்தாலி, கனடா போன்ற நாடுகளும் கொண்டுவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT