Published : 26 Aug 2024 03:52 AM
Last Updated : 26 Aug 2024 03:52 AM
டெல் அவிவ்: இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.
லெபனான் நாட்டின் பிரதான அரசியல்கட்சியாகவும், துணை ராணுவ படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஜூலை 30-ம் தேதி லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார். இதன்பிறகு, இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழலில் ஷியா முஸ்லிம்களின் அர்பாயின் தினத்தையொட்டி இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு நேற்று 320 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது சரமாரியாக குண்டுகளும் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படையின் 100 போர் விமானங்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘இஸ்ரேலின் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று அதிகாலை ஏவுகணைகளை வீசினர். அயர்ன் டோம், சி-டோம் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மூலம் நடுவானில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் சில ஏவுகணைகள் விழுந்தன.இதில் சில கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இஸ்ரேலின் 100 போர் விமானங்கள், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளங்கள் மீது குண்டுகளை வீசின. இதில் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. நாங்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தினோம்’’ என்றனர்.
ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில்நேற்று அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இது 48 மணி நேரம் அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஓரணியாக செயல்படுகின்றன. ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா ஆகியவை எதிரணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த எதிரணி, முஸ்லிம் நாடுகளை தங்கள் பக்கம் ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறது. மத்திய கிழக்கில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்காக இஸ்ரேலை சரியான நேரத்தில் பழிவாங்குவோம் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படையின் 2 விமானம்தாங்கி போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் ஓமன் வளைகுடா பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
பதிலடி தொடரும் என நெதன்யாகு எச்சரிக்கை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நெதன்யாகு, “நாட்டை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்த கதை இதோடு முடியாது, தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஹிஸ்புல்லா வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேலின் 11 ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினோம். இதில் இஸ்ரேல் ராணுவத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இது முதல்கட்ட தாக்குதல். விரைவில் இதைவிட மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம்” என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT