Published : 25 Aug 2024 09:27 PM
Last Updated : 25 Aug 2024 09:27 PM

ஹிஸ்புல்லா தாக்குதலும் பதிலடியும்: இஸ்ரேல் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம் - முழு விவரம்

இஸ்ரேல் - லெபனான் எல்லை பகுதி

ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

“ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாங்கள் கண்டறிந்த தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தேசத்தையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கான உரிமை மற்றும் கடமை இஸ்ரேலுக்கு உள்ள என்ற லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ளோம்” என ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் என்ன? - ஹிஸ்புல்லா விளக்கம்: கடந்த மாதம் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் ஃபவத் ஷுக்ர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல் தொடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. காசா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு போன்ற காரணங்களால் தாக்குதலை தாமதப்படுத்தியதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்ததாக அந்த நாடு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரவை கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் காரணமாக அந்த பகுதிக்கான குறிப்பிட்ட விமான நிறுவனங்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடுப்பதற்கு முன்பாகவே, லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாக்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை நாங்கள் முன்கூட்டியே கண்டறிந்தோம். இஸ்ரேலிய மக்கள் மீதான அச்சுறுத்தலை தணிக்கும் விதமாக, இஸ்ரேலிய ராணுவ விமானங்கள் ஹில்புல்லாக்களின் இலக்குகளை நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு லெபனானில், வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை எங்கள் விமானங்கள் தாக்கி அழித்தன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 100 ஐஏஎஃப் போர் விமானங்கள், தெற்கு லெபனானில் உள்ள ஹில்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர்களை தாக்கி அழித்தன. இவைகளில் பல வடக்கு இஸ்ரேல் மற்றும் மத்திய இஸ்ரேலை குறிவைத்து இருந்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், அடுத்த 48 மணி நேரத்துக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார். ஹோம் ஃப்ரண்ட் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்தச் சிறப்பு சூழ்நிலை, பொதுமக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஐடிஎஃப் ஹோம் ஃப்ரண்ட்-க்கு அதிகாரம் அளிக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு பதில் அளித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பாதக தெரிவித்துள்ளது.

காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான இந்த மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போதைய இந்தத் தாக்குதல் லெபனானில் முழு அளவிலான தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலால் 1,200 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் பலர் பொதுமக்கள். இதனைத் தொடர்நந்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் ராணுவ நடவடிக்கைகளால் இதுவரை 40,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x