Published : 24 Aug 2024 12:20 PM
Last Updated : 24 Aug 2024 12:20 PM
இஸ்லாமாபாத்: பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஸ்டேட் பாங்க் கவர்னர் ஜமீல் அகமது இஸ்லாமாபாத்தில் வங்கி மற்றும் நிதி தொடர்பான செனட் குழுவிடம் புதிய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான தகவலை தெரிவித்திருக்கிறார். “தற்போதுள்ள அனைத்து காகித கரன்சி நோட்டுகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும்.
ரூ.10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 ஆகிய மதிப்புகளில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் டிசம்பரில் வெளியிடப்படும். பழைய நோட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு புழக்கத்தில் இருக்கும். இந்த காலகட்டத்தில் மத்திய வங்கி அவற்றை சந்தையில் இருந்து படிப்படியாக அகற்றிவிடும்.
முதலில் ஏதேனும் ஒரு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் விடப்படும். இந்த ரூபாய் நோட்டுக்கள் புதிய பாலிமர் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், மற்ற மதிப்புகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் விடப்படும்.
தற்போது சுமார் 40 நாடுகள் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை போலியாக மாற்றுவது கடினம். ஹாலோகிராம் மற்றும் சீ-த்ரூ-விண்டோ போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை அது கொண்டிருக்கும்” என ஜமீல் அகமது தெரிவித்ததாக செனட் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், 5,000 ரூபாய் நோட்டுக்கள் ஊழல்வாதிகள் தங்கள் வணிகத்தை எளிதாகச் செய்வதற்கு உதவுவதாகவும் எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹ்சின் அஜீஸ் கூறி இருந்த நிலையில், அது குறித்து கேள்விக்கு 5,000 ரூபாய் நோட்டை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய வங்கிக்கு இல்லை என்று ஜமீல் அகமது பதில் அளித்துள்ளார்.
பாலிமர் ரூபாய் நோட்டுகளை 1998 ல் முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT