Published : 22 Aug 2024 03:04 PM
Last Updated : 22 Aug 2024 03:04 PM

டெக்சாஸில் 90 அடி அனுமன் சிலை திறப்பு: அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை இதுவே!

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் புதிய அடையாளமாக இந்தச் சிலை மாறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை என்ற அந்தஸ்தை இந்த சிலை பெற்றுள்ளது.

நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை (151 அடி), இதுவே அமெரிக்காவின் முதல் உயரமான சிலை. அடுத்ததாக ஃப்ளோரிடாவில் உள்ள டிராகன் சிலை (110 அடி), இப்போது டெக்சாஸ் அனுமன் சிலை (90 அடி) மூன்றாவது உயரமான சிலையாக உள்ளது. இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ ‘Statue of Union’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சிலை உலகின் மிகவும் உயரமான சிலைகளின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள மிக உயரமான அனுமன் சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இது குறித்து சிலை அமைத்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “ஆகஸ்ட் 15 முதல் 18-ஆம் தேதி டெக்சாஸின் சுகர்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்‌ஷ்மி கோயிலில் நடந்த பிரதிஷ்டை விழாவில் அனுமனின் சிலையை நிறுவியுள்ளோம். இந்த அனுமன் மூர்த்தி ஒற்றுமையின் சின்னம். சுயநலமற்ற தன்மை, அர்ப்பணிப்பு, ஒற்றுமையின் அடையாளமாக அனுமன் சிலையை நிறுவியுள்ளோம். ராமர் - சீதா மீண்டும் இணைய அனுமன் முக்கிய பங்காற்றியதை நினைவுகூர்ந்திடவே இந்தச் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ எனப் பெயரிட்டுள்ளோம்.

90 அடி உயரம் கொண்ட வெண்கலத்திலான இந்த பிரம்மாண்ட அனுமன் சிலை, அமெரிக்காவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வெளியில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும். டெக்சாஸின் புதிய அடையாளமாகவும் இருக்கும் என நம்புகிறோம்.” என்றனர். இந்திய சுதந்திர தினத்தன்று தொடங்கிய அனுமன் சிலை பிரதிஷ்டை விழா ஆகஸ்ட் 18 வரை நடைபெற்றது. இந்தச் சடங்குகள் ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிஜி மேற்பார்வையில் நடைபெற்றன.

சிலை பிரதிஷ்டையின்போது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட புனித நீரும் சிலையின் மீது தெளிக்கப்பட்டது. சிலைக்கு 72 அடியிலான பிரம்மாண்ட மாலை சூட்டப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமர், அனுமன் பெயர்களை பக்தியுடன் முழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x