Published : 22 Aug 2024 04:17 AM
Last Updated : 22 Aug 2024 04:17 AM

ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் அரசுமுறை பயணம்: போலந்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக போலந்து நாட்டுக்கு சென்றுள்ளார். தலைநகர் வார்சாவில் தன்னை வரவேற்க வந்த இந்திய வம்சாவளியினருடன் நேற்று கலந்துரையாடினார்.படம்: பிடிஐ

வார்சா: அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் போலந்து சென்றடைந்த அவருக்கு தலைநகர் வார்சா விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

போலந்தில் 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.வார்சாவில் உள்ள இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்களை சந்திக்கிறார்.

மகாராஜா நினைவிடம்: இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த 6 ஆயிரம் பெண்கள், குழந்தைகள் இந்தியாவின் ஜாம்நகர், கோலாப்பூரில் அகதிகளாக தங்கியிருந்தனர். நவநகரின் மகாராஜா ஜாம் சாஹிப் திக்விஜய் சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா, கோலாப்பூர் மகாராஜா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்களை பாதுகாத்தனர். இந்தியாவில் அவர்கள் அகதிகளாக இருந்தபோது அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஜாக்கள் செய்திருந்தனர்.

அவர்களது சேவையை பாராட்டும் விதமாக வார்சாவின் ஒச்சோட்டா மாவட்டத்தில், மகாராஜாதிக்விஜய் சிங்ஜிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கோலாப்பூர் மகாராஜாவுக்கு, மான்டே காசினோ போர் வளாகத்தில் நினைவிடம் உள்ளது. இந்த 2 நினைவிடங்களுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

2 நாள் பயணத்துக்கு பிறகு, போலந்தில் இருந்து பிரதமர் மோடி, ரயிலில் 10 மணி நேரம் பயணம் செய்து, 23-ம் தேதிஉக்ரைன் செல்கிறார். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதற்கு பின்னர், முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார். ரஷ்யாவுடன் நீடித்து வரும் போருக்கு அமைதியான தீர்வு காண்பது குறித்து அவருடன் ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமரின் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி தன்மயா லால் கூறியதாவது: முதலில் போலந்து செல்லும் பிரதமர் அங்கு 2 நாட்கள் தங்கி பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர்ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோருடன் பேச உள்ளார். அதன் பின்னர்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பின் பேரில், பிரதமர் மோடி23-ம் தேதி உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்று பயணமாக அமையும்.

இந்த பயணம்மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும்முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

அதேபோல, 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைன் செல்வது இதுவே முதல்முறை. இரு நாடுகளின் தலைவர்கள் இடையிலான சமீபத்திய உயர்நிலை தொடர்புகளின் அடிப்படையில் இந்த பயணம் அமைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x