Published : 13 Aug 2024 06:47 PM
Last Updated : 13 Aug 2024 06:47 PM
வாஷிங்டன்: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், "ஷேக் ஹசீனாவை அதிகாரத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டதாக எந்த அறிக்கைகள் அல்லது வதந்திகள் இருந்தாலும் - அவை அனைத்தும் தவறானவை. அது உண்மையல்ல. இது வங்கதேச மக்களின் ஒரு தேர்வு. வங்கதேச அரசாங்கத்தின் எதிர்காலத்தை வங்கதேச மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுமானால் நிச்சயமாக நாங்கள் பதில் கூறுவோம். அந்த அடிப்படையிலேயே தற்போது நான் பதில் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 5-ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 11-ம் தேதி ஷேக் ஹசீனா அளித்த நேர்காணலில், அமெரிக்காவின் சதியால் தான் ஆட்சியை இழந்ததாகக் கூறி இருந்தார். "வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால், வங்கதேசத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தேன். தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். நான் பேசியதை திரித்து கூறி மாணவர் போராட்டத்தை சிலர் தூண்டினர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பதை நான் விரும்பவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பதவியை ராஜினாமா செய்தேன்.
வங்கதேச மக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக விரோதிகளை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களை எதிர்த்து நில்லுங்கள். அவாமி லீக் கட்சியினர், பொதுமக்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. நாட்டின் விடுதலைக்காக என் தந்தையும் (முஜிபுர் ரகுமான்), குடும்பத்தினரும் இன்னுயிரை தியாகம் செய்தனர். வங்கதேசம் மற்றும் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். இறைவன் அருளால் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்பி வருவேன்" என ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...