Published : 13 Aug 2024 02:11 PM
Last Updated : 13 Aug 2024 02:11 PM

வங்கதேசம் | போராட்டத்தால் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளும் சுமார் ஒரு மாதத்துக்கப் பிறகு நாளை (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

வங்கதேச முதன்மை கல்வி மக்கள் தொடர்பு அதிகாரி மஹ்புபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளை அரசு மூடியது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து, அதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பினார்.

இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் கடந்த 8-ம் தேதி இடைக்கால அரசு பதவியேற்றது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து தற்போது அங்கு அமைதி திரும்பி வருவதால், போராட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஏறக்குறைய ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிகள் நாளை (புதன்கிழமை) முதல் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மீண்டும் தொடங்கும் 999 சேவை: இதேபோல், காவலர்கள் போதுமான அளவில் பணியில் இல்லாததால் பாதிக்கப்பட்ட தேசிய அவசர உதவி எண் 999 இப்போது முழு திறனுடன் செயல்படுகிறது. கூடுதல் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், 999 சேவையின் தலைவருமான முகமது தபாரக் உல்லா இதை உறுதிப்படுத்தி உள்ளார். “நாடு முழுவதும் உள்ள நிலையங்களில் காவலர்கள் இல்லாததால் எங்களால் சேவையை வழங்க முடியவில்லை. நாட்டில் உள்ள அனைத்து நிலையங்களிலும் போலீஸார் நேற்று மீண்டும் பணியைத் தொடங்கியதால், நாங்கள் இப்போது 999 சேவையை முழு வீச்சில் வழங்குகிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் தொடங்கும் ரயில் சேவை: நாடு முழுவதும் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து 25 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு இன்று (செவ்வாய்) மீண்டும் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை முதல் நகரங்களுக்கு இடையிலான ரயில்கள் மீண்டும் தொடங்கும் என்று வங்கதேச ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x