Published : 12 Aug 2024 05:55 AM
Last Updated : 12 Aug 2024 05:55 AM

வங்கதேசத்தில் 500 ஆண்டு பழமையான கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம் மாணவர்கள்

டேராடூன்: வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட் டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

டாக்காவின் முக்கியமான மற்றும் பரபரப்பான மவுச்சக் பஜார் அருகே அமைந்துள்ள 583 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரி காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது அந்த கோயிலுக்கு வன்முறையாளர்களால் எந்த ஆபத்தும் நேராத வகையில் முஸ்லிம் மாணவர் குழு இரவும் பகலுமாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவரான அப்ரார் ஃபயாஸ் (26) கூறியதாவது: வங்கதேச மண்ணில் மனிதரையும், அவர்களது வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதாக சபதம் செய்துள்ளோம். அந்த வகையில், 583 ஆண்டுகள் பழமையான இந்த காளி கோயிலை வன்முறை கும்பலிடமிருந்து பாதுகாக்க 35 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

அதில் எனது நண்பர்கள் ராபின் மோஜும்தார் (25), முஸ்தாஹித் அப்ரார் சித்திக் (26) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 10-15 பேர் அடங்கிய துணைக் குழுக்களாக பிரிந்து காளி கோயிலை பாதுகாத்து வருகிறோம்.

இப்பகுதியில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மாணவர் அப்ரார் தெரிவித்தார்.

கோயிலைவிட்டு போகமாட்டேன்: பூசாரி - எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் காளி கோயிலை விட்டு போகப்போவதில்லை என 12 தலைமுறைகளாக அந்த கோயிலில் பூசாரியாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த லால் கோஸ்வாமி (73) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “1971-ல் பாகிஸ்தான் படையால் இரண்டு முறை கடத்தப்பட்டேன். ஆனால், காளியின் ஆசீர்வாதத்தால் திரும்பி வந்து பூஜாரியாக மகா காளிக்கு எனது நேரத்தை முழுவதுமாக அர்ப்பணித்து வருகிறேன். நான் நிறைய வன்முறைகளை பார்த்து விட்டேன். அதனால், நான் ஒருபோதும் பயந்து வங்கதேசத்தை விட்டு வெளியேற மாட்டேன். என் தாய்நாட்டிலேயே இறக்க விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x