Published : 08 Aug 2024 01:31 PM
Last Updated : 08 Aug 2024 01:31 PM
டாக்கா: “என் அன்னையைப் பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாமல் மனம் நொறுங்கிவிட்டது” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தை நான் மிகவும் விரும்புகிறேன். எனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளால் மனம் வேதனை அடைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என் அன்னையை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்துவிட்டது. அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் பொறுப்பை வகிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சடைந்துள்ளார். இதையடுத்து, தனது கருத்தை சைமா வசேத் முதல்முறையாக பதிவு செய்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநரான சைமா வசேத், கடந்த பிப்ரவரியில்தான் அந்த பொறுப்பை ஏற்றார். இந்த பொறுப்பை ஏற்ற முதல் வங்கதேசத்தவர் இவர். அதோடு, இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண் இவர்.
முன்னதாக ஜெர்மனி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஷேக் ஹசீனா மகன் சஜீப் வசேத் ஜாய், “வங்கதேசத்தின் பிரதமராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனது அம்மா. அவரும் அவரது குடும்பத்தினரும் யாருக்காக இவ்வளவு செய்தார்களோ, அந்த நபர்கள் தாக்குதலை நடத்துவார்கள் என்றும், அதன் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவரால் நம்ப முடியவில்லை. அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.
அவர் அமெரிக்கா அல்லது பிரிட்டனில் புகலிடம் பெறுவார் என்பெதல்லாம் வதந்திகள். அவர் இன்னும் அது குறித்து முடிவு எடுக்கவில்லை. அவர் டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார். எனது சகோதரி எனது அம்மாவுடன் இருக்கிறார். அதனால், அவர் தனியாக இல்லை.
வங்கதேசத்தை விட்டு வெளியேற எனது அம்மா விரும்பவில்லை. நாங்கள் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. வங்கதேசத்தில் நடந்த போராட்டம் என்பது அரசியல் இயக்கம் அல்ல. அது ஒரு கும்பல்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment