Published : 07 Aug 2024 11:30 AM
Last Updated : 07 Aug 2024 11:30 AM

இலங்கை அதிபர் தேர்தல்: பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளராக ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிப்பு

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

உலகளாவிய கரோனா பரவல் காரணமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். மக்கள் நடத்திய போராட்டங்களினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21 அன்று அதிபர் தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவித்தது. இதற்காக ஆகஸ்ட் 15 முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

இம்முறை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக ராஜபகசவின் மகன் நமல் ராஜபக்ச (38) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான நமல் ராஜபக்ச லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பயின்றவர். 2010 முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x