Published : 07 Aug 2024 09:46 AM
Last Updated : 07 Aug 2024 09:46 AM

“கவனமுடன் இருங்கள்” - பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆங்காங்கே வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் வரும் இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டனில் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளதை இந்தியர்கள் அறிந்திருக்கக் கூடும். பிரிட்டன் நிலவரத்தை தூதரகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரும் பயணிகள் சூழ்நிலையை அறிந்து கவனமுடன் இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். வன்முறை நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசரத் தேவைக்கு தூதரகத்தை நாட விரும்புவோர் +44(0)2078369147 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது inf.london@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.

குறிப்பாக பெல்ஃபாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் திங்கள் கிழமை மாலை முதல் பதற்றமான சூழல் நிலவியது. ஒரு சூப்பர் மார்க்கெட் தீக்கிரையாக்கப்பட்டது. போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. லண்டன் பிபிசி செய்தி நிறுவன தகவலின்படி வன்முறை வெடித்ததில் இருந்து இதுவரை 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரிட்டனின் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக பிரதமர் கீர் ஸ்டார்மர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x