Published : 06 Aug 2024 07:25 PM
Last Updated : 06 Aug 2024 07:25 PM
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என அந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவலர்கள், ஷேக் ஹசீனா ஆட்சியின் ஆதரவாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. காவல் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களின் வீடுகள், கோயில்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பல கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், தாங்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வங்கதேசத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், இந்துக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அங்குள்ள இஸ்கான் கோயில் துறவி ஒருவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல இந்து இசைக் கலைஞர் ராகுல் ஆனந்தாவின் வீடும் எரிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் இன்று பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக அந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன.
— European Union in Bangladesh (@EUinBangladesh) August 6, 2024
சிறுபான்மையினரைப் பாதுகாக்க மாணவர் இயக்கம் மற்றும் பிறரின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புவாத வன்முறையை நிராகரிக்க வேண்டும். வங்கதேச மக்கள் அனைவரின் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். மிகவும் அவசரமாக இந்த வேண்டுகோளை நாங்கள் முன்வைக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT