Published : 06 Aug 2024 05:17 PM
Last Updated : 06 Aug 2024 05:17 PM
டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் இன்று (ஆக.6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 நாட்களுக்குள் தேர்தல்: அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 90 நாட்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் அடுத்த 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை: இதனிடையே, வங்கதேசத்தில் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, ராணுவத் தளபதி இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
முன்னதாக, நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்களால் ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசை வழிநடத்த தயார் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
“மாணவர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலையை கொடுத்திருக்கிறார்கள். மாணவர்களால் இவ்வளவு பெரிய தியாகம் செய்ய முடியுமானால், எனக்கும் சில பொறுப்புகள் உண்டு. எனவே, அவர்கள் கோரிக்கையின்படி நான் பொறுப்பை ஏற்க முடியும் என்று மாணவர்களிடம் கூறினேன்,” என்று முகமது யூனுஸ் கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT