Published : 05 Aug 2024 11:15 PM
Last Updated : 05 Aug 2024 11:15 PM

“ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார்” - மகன் உறுதி | வங்கதேச போராட்டம்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் தெரிவித்த அவர், “இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்து விட்டார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார்.

அவர் இந்த நாட்டையே தலைகீழாக மாற்றினார். அவர் ஆட்சிக்கு வரும்போது இது ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக இருந்தது. ஏழை நாடாக கருதப்பட்டது. ஆனால் இப்போது இந்த நாடு ஆசியாவின் அதிகம் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

நேற்று மட்டும் கலவரத்தில் 13 போலீஸார் உயிரிழந்துள்ளனர். கலவரக்காரர்கள் மக்களை கொல்லும்போது போலீஸார் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” இவ்வாறு சஜீப் வஜீத் தெரிவித்தார்

முன்னதாக வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x