Published : 05 Aug 2024 07:09 PM
Last Updated : 05 Aug 2024 07:09 PM
புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். இங்கிலாந்து அரசிடம் அவர் தஞ்சம் கோருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். இந்திய விமான படையினர் மற்றும் ராணுவத்தினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்றனர். தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் நிலை குறித்து அஜித் தோவலிடம் ஷேக் ஹசீனா விவரித்துள்ளார். மேலும், தனது அடுத்தகட்ட திட்டம் குறித்தும் விவாதித்துள்ளார்.
அதேவேளையில், வங்கதேசத்தின் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கி கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.
மம்தா வேண்டுகோள்: வங்கத்தில் அமைதியை நிலைநாட்டவும், ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "அமைதியைப் பேணவும், அனைத்து வகையான ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்கவும் மேற்கு வங்கத்தின் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ரயில் சேவை நிறுத்தம்: இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்று கொண்டிருந்த கொல்கத்தா - டாக்கா - கொல்கத்தா நட்பு எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூலை 19 முதல் இந்த ரயில் சேவை வழங்கப்படவில்லை என்றும் ஆகஸ்ட் 6 வரை இந்த சேவை இருக்காது என்றும் கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராணுவத் தளபதி பொறுப்பேற்பு: நாட்டின் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக தெரிவித்துள்ள ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், ராணுவம் "இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்" என்றும் கூறியுள்ளார். மேலும், யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், புதிய அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்குவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
"நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது." என்று தலைமை தளபதி தெரிவித்துள்ளார். ராணுவத்தின் தலைமை தளபதியாக வாக்கர் உஸ் ஜமான் கடந்த ஜூன் மாதம்தான் நியமிக்கப்பட்டார். இவர், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தூரத்து உறவினர் என கூறப்படுகிறது.
பின்னணி என்ன? - கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT