Published : 05 Aug 2024 03:57 PM
Last Updated : 05 Aug 2024 03:57 PM
டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஷேக் ஹசீனா, பாதுகாப்பு கருதி வெளிநாடு புறப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு புறப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். நேற்றைய போராட்டத்தில் மட்டும் 94 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரை போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.
முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா “அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரிவித்தார்.
பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இணைய சேவையும் முடக்கப்பட்டது. அதோடு, 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டாக்கா நோக்கிய பேரணியை மாணவர்கள் தீவிரப்படுத்தினர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இன்று (திங்கள்) 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் இருந்தும் டாக்கா வந்தடைந்த மாணவர்கள், பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறி இருக்கிறது.
பதவியை ராஜினாமா செய்தார் ஹசீனா: இதனிடையே, வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி அவர் அங்கிருந்து வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவத் தலைமை தளபதி உரை: இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசை ராணுவம் அமைக்கும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா நடவடிக்கை: இதனிடையே, இந்தியாவை ஒட்டிய 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி கொல்கத்தா விரைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT