Published : 25 Apr 2014 09:00 AM
Last Updated : 25 Apr 2014 09:00 AM
வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்பை அளித்துள்ளது துபையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான புர்ஜ் அல் அரப் தங்கும் விடுதி.
துபையின் பிரபல தங்கும் விடுதியான புர்ஜ் அல் அரப் 60 மாடிகளைக் கொண்டது. இங்கு மொத்தம் 202 அதி நவீன சொகுசு அறைகள் உள்ளன. அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டிடங்களுள் ஒன்று.
இந்த விடுதியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு கடல் மட்டத்தில் இருந்து 212 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கட்டிடத்திலிருந்து சற்றே வெளியே நீட்டியபடி வட்டவடிவத்திலிருக்கும் இந்த ஹெலிகாப்டர் இறங்குதளம் மிகவும் புகழ்பெற்றது.
கோல்ப் ஜாம்பவான் டைகர் வுட்ஸ் இந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் 2004-ம் ஆண்டு கோல்ப் விளையாடியுள்ளார். 2005-ல், ரோஜர் பெடரரும் ஆந்த்ரே அகாஸியும் இங்கு டென்னிஸ் விளையாடியுள்ளனர்.
இங்கு ஆடம்பர திருமணத்தை நடத்த விரும்புபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர புர்ஜ் அல் அரப் முன்வந்துள்ளது.
இங்கு திருமணத்தை நடத்த குறைந்தபட்சம் 55,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.33 லட்சம்) தேவை. மணமகன் அல்லது மணப்பெண் ஆகியோரின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ப கட்டணம் அதிகரித்துக் கொண்டே போகும்.
இந்த ஹெலிபேடில் திருமணத்தை நடத்த விருப்பமுள்ள மணமக்கள் ‘அகஸ்டா 109' ரக ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகவோ அல்லது புகழ்பெற்ற ரோல்ஸ் ராய் பேன்தம் காரில் தரைவழியாகவோ புர்ஜ் அல் அரப் விடுதிக்கு அழைத்து வரப்படுவர்.
அந்த விடுதியில் இருக்கும் 202 சொகுசு அறைகளில் ஏதேனும் ஒன்றில் மணமக்கள் தங்கிக் கொள்ளலாம். மேலும், அந்த விடுதியின் சமையல் கலைஞர்களின் உதவியுடன் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகள், கேக் வகை களையும் தேர்வு செய்து கொள்ளலாம் என புர்ஜ் அல் அரப் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT