Published : 03 Aug 2024 07:09 PM
Last Updated : 03 Aug 2024 07:09 PM

இஸ்ரேல் பாதுகாப்புக்காக கூடுதல் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹொதிஸ் ஆகியவற்றின் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான தமது ராணுவ பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். முன்னதாக செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா கமாண்டர் ஃபுவாத் ஷுகுர் கொல்லப்பட்டார். இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் ஒரு முழுமையான பிராந்திய போர் மூளுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கு ஆசியாவில் உள்ள தனது ராணுவ கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளுக்கு கூடுதல் ஏவுகணை பாதுகாப்பு திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். எதிரி ஏவுகணைகளை அழித்து ஒழிப்பதற்கான நிலம் சார்ந்த பாதுகாப்பு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவை நோக்கி ஒரு போர் விமானப் படை நகர்த்தப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் அருகே ஒரு விமானம் தாங்கி கப்பல் நிறுத்தப்படும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கில் இருக்கும் இரண்டு அமெரிக்க கடற்படை போர்க் கப்பல்கள், செங்கடலின் வடக்கே மத்தியதரைக் கடல் நோக்கிச் செல்லும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்திருந்தார். இது குறித்த தகவலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட வெள்ளை மாளிகை, "இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (வியாழக்கிழமை) தொலைபேசியில் பேசினார். அப்போது, ​​இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து விவாதித்தார். இஸ்ரேலுக்கு எதிராக ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் இருந்து சாத்தியமான தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்க இராணுவம் களத்தில் நிற்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்" என்று தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x