Published : 28 May 2018 02:31 PM
Last Updated : 28 May 2018 02:31 PM
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பொதுமக்களிடம் நிற வேறுபாடின்றி பழகுவதற்காக சிறப்புப் பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால் அமெரிக்கா முழுவதும் உள்ள அதன் ஆயிரக்கணக்கான கிளைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிறவெறி ஒழிப்புப் புரட்சி, நிறவெறியற்ற ஆட்சி எல்லாம் நடந்துவிட்டன. அதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைத்து இன மக்களிடமும் சமரசத்தைக் கடைப்பிடிக்கும் நல்ல மாற்றமும் உருவாகி வந்தது. குறிப்பாக கருப்பினத்தவரை அவமதிக்கும் சம்பவங்கள் குறைந்திருந்தன.
ஆனால் தற்போது அங்கு நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்கள் இம்மாற்றம் மீண்டும் தலைகீழ் நிலைக்கு போய்விட்டதையே காட்டியுள்ளது.
கடந்த மாதம் இப்படியொரு சம்பவம் நடந்தபோது அதுவும் தனது கடையிலேயே நடந்தபோது ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தனது வருத்தத்தைத் தெரிவித்தது.
பிலடெல்பியாவில் உள்ள ஸ்டார்பக்ஸ் கஃபே ஒன்றில் கறுப்பின இளைஞர் இருவர் அவமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்டார் பக்ஸ் நிறுவனம் இதைக் கண்டித்து, ஆரம்பக் கட்டமாக கடந்த ஏப்ரல் 17 அன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்துப் பேசியது. இக்கூட்டத்திற்கு சுமார் 1 லட்சத்து 75 ஊழியர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டம் சுமார் 4 மணிநேரம் நீடித்தது.
குறிப்பிட்ட அச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகின. அதில், ஸ்டார்பக்ஸ் கடைக்கு இரு கருப்பினத்தவர்கள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் கழிப்பறை பயன்படுத்த வேண்டும் என்று கேட்கிறார். கடையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் என்று கூறுகின்றனர். அதனால் குளிர்பானத்தை ஆர்டர் செய்துவிட்டு க்யூவில் உள்ள மூன்றாவது நபருக்கு அடுத்ததாக செல்வதற்காக இருக்கையில் இருவரும் அமர்கின்றனர். இதற்கிடையில் கடையின் மேலாளர் போலீஸுக்கு போன் செய்து அவர்களை வரவழைக்கிறார்.
சற்றுநேரத்தில் வந்த போலீஸ்காரர்கள், இரண்டு இளைஞர்களுக்கும் கைவிலங்கு மாட்டினர். இதற்கும் அந்த இரு இளைஞர்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. அங்கிருந்த வெள்ளையின வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் ''அவர்கள் என்ன செய்தார்கள் அவர்கள் என்ன செய்தார்கள்'' என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து ஐந்து நாட்களாக இந்த சம்பவம் சீற்றத்தைத் தூண்டியது. போராட்டங்கள் வெடித்தன.
முன்மாதிரியாக இருக்கும்
ஷரோன் ரஷ் என்ற சட்டப் பேராசிரியர், ''இந்த மாபெரும் காபி நிறுவனம் இனவெறி வேற்றுமையைக் களைய தனது ஊழியர்களுக்காக நடத்தும் இந்தப் பயிற்சி மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும்'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT