Published : 25 Jul 2024 04:07 AM
Last Updated : 25 Jul 2024 04:07 AM

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது

நேபாளத்தின் காத்மாண்டு நகரில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்.படம்: பிடிஐ

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 19 பயணிகளுடன் நேற்று காலை பொக்காரா நகருக்கு புறப்பட்டது.

இந்த விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது (டேக்-ஆஃப்) திடீ ரென சறுக்கியது. நிலைதடுமாறிய விமானம், ஓடுபாதையில் இருந்து சறுக்கி அருகில் உள்ள காலியிடத்தில் பயங்கர வேகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானம் கொழுந்துவிட்டு எரிந்ததால் பயணிகளால் வெளியே வரமுடியாமல், உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதற்கிடையே, விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமான பைலட், அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

நேபாள நாட்டின் சவுர்யா விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், காத்மாண்டுவில் இருந்து பொக்காரா என்ற நகருக்கு புறப்பட்டபோது விபத்து நடந்துள்ளது. விபத்தை தொடர்ந்து, திரிபுவன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் சிஆர்ஜே-200 வகையை சேர்ந்தது. இதில் 50 பேர் வரை அமரலாம். ஆனால், நேற்று புறப்பட்ட இந்த விமானத்தில் மொத்தம் 19 பேர் மட்டுமே பயணித்தனர். இவர்கள் அனைவருமே சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் என்று நேபாள நாட்டின் போலீஸ் செய்தித் தொடர்பாளர் டான் பகதூர் கார்க்கி தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கு பகுதியில்.. திரிபுவன் விமான நிலையம் அமைந்துள்ள இடம் மிகவும் சிக்கலான பகுதி என்று கூறப்படுகிறது. காத்மாண்டு பீடபூமி பகுதியில் இந்த விமானநிலையம் அமைந்துள்ளது. மேலும், விமான நிலையத்தை சுற்றி பெரும் பள்ளங்கள், பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளன. உலகில் உள்ள அபாயகரமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

நேபாள நாட்டில் இதற்கு முன்பு 2023-ல் ஏட்டி ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளாகி 72 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் இந்தியர்கள். அதற்கு முன்னதாக 1992-ல் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள் ளாகி 167 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தற்போது நடந்துள்ள விபத்துதான் பெரிய விபத்தாக கருதப்படுகிறது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் ஓடுபாதை (ரன்-வே), டேபிள் டாப் வகையை சார்ந்தது. மலைகள், பள்ளத்தாக்குகள் உள்ள பகுதிகளில் நிலத்தை உயர்த்தி அங்கு மேடை போன்ற ஓடுபாதை உருவாக்கப்படும்.

ஆபத்தான டேபிள்டாப் ஓடுபாதை: இந்த விமான நிலையங்கள் குறுகிய தூர ஓடுபாதையை கொண்டிருக்கும். எனினும், மிகப்பெரிய அளவிலான விமானங்கள் இங்கு இறங்கி, ஏற முடியும். ஆனாலும், இவை ஆபத்து நிறைந்ததாகவே கருதப்படுகிறது.

இந்தியாவில் இதுபோல, மங்களூரு (கர்நாடகா), சிம்லா (இமாச்சல பிரதேசம்), கோழிக்கோடு (கேரளா), லெங்புய் (மிசோரம்), பாக்யாங் (சிக்கிம்) ஆகிய நகரங்களில் டேபிள் டாப் ஓடுபாதை அமைந்துள்ளது.

கடந்த 2010-ல் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி 158 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x