Published : 22 Jul 2024 06:15 AM
Last Updated : 22 Jul 2024 06:15 AM

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் ஓய்கிறது

டாக்கா: வங்கதேசத்தில் கல்வி, அரசுவேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டில் வங்கதேசம் உதயமானது. அப்போதுபாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 80 சதவீத இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டது. பொது பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது.

பின்னர் கடந்த 1976-ம் ஆண்டில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாகஅதிகரித்தது.

கடந்த 1985-ம் ஆண்டில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான இடஒதுக்கீடு மேலும் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. புதிதாகசிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்பிறகு பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு 45 சதவீதமாக உயர்ந்தது.

கடந்த 2018-ம் ஆண்டில் வங்கதேச அரசு, ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் ரத்து செய்தது. இதுதொடர்பான வழக்கில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தபடி சுதந்திரபோராட்ட தியாகிகளின் வாரிசுகள், பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மகளிர், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கடந்த ஜூன் 5-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து டாக்கா மற்றும் சிட்டாங் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்தபோராட்டம் வங்கதேசம் முழுவதும் பரவி, கலவரமாக மாறியது.

இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர்காயமடைந்து உள்ளனர். 60 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்கதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்தவழக்கு வரும் ஆகஸ்ட் மாதம்விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருந்தது. ஆனால் வங்கதேசம் முழுவதும் கலவரம் பரவியதால் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்கூட்டியே வழக்கு விசாரிக்கப்பட்டது.

அப்போது கல்வி, அரசு வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது சுதந்திர போராட்ட தியாகிகளின் இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, டாக்கா, சிட்டாங்பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு இருக்கிறது.

கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு, ராணுவ நடவடிக்கை காரணமாக அடுத்த சில நாட்களில் வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மாணவர்கள்: வங்கதேச கல்வி நிறுவனங்களில் சுமார் 8,500 இந்திய மாணவ,மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த நாட்டில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது.

வங்கதசேத்தில் சுமார் 6,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x