Published : 21 Jul 2024 11:54 PM
Last Updated : 21 Jul 2024 11:54 PM
வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென சொல்லப்பட்டது.
இருந்த போதும் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தொடர்வதாக அவர் சொல்லி வந்தார். இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது.
“அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன்.
நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி.
கடந்த 2020-ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக நான் தேர்வு செய்தது கமலா ஹாரிஸை தான். அதிபர் தேர்தலில் இருந்து நான் தற்போது விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவருக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். நம் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி ட்ரம்பை வீழ்த்த வேண்டும்” என பைடன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT