Last Updated : 20 Jul, 2024 07:09 PM

5  

Published : 20 Jul 2024 07:09 PM
Last Updated : 20 Jul 2024 07:09 PM

வன்முறைக் களம் ஆன மாணவர் போராட்டம்: வங்கதேசத்தில் நடப்பது என்ன? | HTT Explainer

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சனிக்கிழமை வரை 105 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், காவல் துறையின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதன் முகப்பு பக்கங்களில் ‘இனி இது போராட்டம் இல்லை, இப்போது இது போர்’ என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு காரணம் என்ன? - கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் போன்ற இந்தச் சூழலுக்கு காரணம், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் அந்நாட்டின் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவுதான். நீதிமன்றத்தின் அந்த உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

படைவீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று வங்கதேசத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர், படைவீரர்களின் குடும்பத்தினர் என்ற பட்டியலின் உண்மைத் தன்மை குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறையினால் நியாயமற்ற முறையில் சிலர் பலன் அடையக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடும் வங்கதேச மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகி இருக்கும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்குதான் இந்த இடஒதுக்கீடு பயனளிக்கும் என்றும் மணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீடு: படைவீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு முறைக்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசு அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. எனினும், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜூன் 5-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வங்கதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக வங்கதேச உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போராட்டத்துக்குப் பின்னால் இருப்பது யார்? - தாங்கள் எந்த அரசியல் குழுக்களையும் சேர்ந்தவர்கள் இல்லை என்று போராட்டம் நடத்தும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களை பாகுபாடுக்கு எதிரான மாணவர்கள் இயக்கம் என்று தெரிவித்துள்ளனர். டாக்கா மற்றும் சிட்டாங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நாட்டின் மற்ற பல்கலைக்கழங்களுக்கும் பரவியது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்கா பல்கலை. மாணவரான ஃபக்கிம் ஃபருக்கி கூறுகையில், "ஃபேஸ்புக் குழுக்கள் மூலம் இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. எங்களுக்கு பின்னால் எந்தவிதமான அரசியல் அமைப்புகளும் இல்லை" என்று தெரிவித்தார்.

இடஒதுக்கீடுக்கு எதிரானவர்களா மாணவர்கள்? - இதனிடையே இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்பாளரான நகித் இஸ்லாம் கூறுகையில், "பொதுவாக நாங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பெரும்பாலான வங்கதேச இளைஞர்களின் நம்பிக்கையாக அரசு வேலைகள் மட்டுமே உள்ளன. இந்த இடஒதுக்கீட்டால் அந்த வாய்ப்புகள் பறிக்கப்படும்" என்றார்.

வன்முறையாக மாறிய போராட்டம்: இதனிடையே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் மாணவர்கள் போராட்டம் மற்றும் இடஒதுக்கீடு குறித்து கேட்டகப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரப்பிள்ளைகள் இடஒதுக்கீடு பெறவில்லை என்றால், வேறு யார் பெறுவார்கள்... ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகளா?" என்றார். ரசாக்கர்கள் என்பது வங்கதேசத்தில் அவமரியாதைக்குரிய வார்த்தை. கடந்த 1971-ம் ஆண்டு விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து போராடியவர்களை குறிக்கும் பதம் அது. இந்த வார்த்தை துரோகமாக கருதப்படுகிறது.

பிரதமரின் இந்தக் கருத்து தங்களை இழிவுபடுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருதினர். இது அவர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அன்று (ஞாயிறு) இரவு டாக்கா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், "நீங்கள் யார்? நீங்கள் யார்? நான் ரசாக்கர், நான் ரசாக்கர்" என்று முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை டாக்கா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவின் உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர், செவ்வாய்க்கிழமை போராட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. செவ்வாய்க்கிழமை ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது ஆளுங்கட்சி மாணவர் அமைப்பினரும் போலீஸாரும் தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. இதில் சிலர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி மிகவும் மோசமடைந்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் புல்லட்டுகளையும் போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தினர். மாணவப் போராட்டக்கார்கள் அரசு தொலைக்காட்சி கட்டிடத்துக்கு தீ வைத்தனர். கலவரம் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. டாக்காவுக்குள் வந்து செல்லும் மெட்ரோ சேவையை ரத்து செய்தது.

வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நர்சிங்டி மாவட்டத்தில் சிறைச்சாலையை முற்றுகையிட்டு அதற்கு தீ வைத்தனர். அதற்கு முன்பாக சிறைக் கைதிகளை விடுவித்தனர். வன்முறைத் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வங்கதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: வங்கதேசத்தில் நிலவும் கலவரச் சூழலுக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம், தேவையில்லாமல் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. அங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய எல்லை வாயிலாகவும் வருகின்றனர். வங்கதேசத்தில் கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வங்கதேசத்தில் மருத்துவம் பயில அவர்கள் அங்கு செல்கின்றனர்.

இந்தியாவின் நிலைப்பாடு: இதனிடையே, வங்கதேச வன்முறை குறித்த கேள்விக்கு வெள்ளிக்கிழமை பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரமாக பார்க்கிறோம்” என்றார். வன்முறை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட இந்திய வெளியுறவுத் துறை, அங்கு வசிக்கும் 15,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x