Published : 22 May 2018 06:58 PM
Last Updated : 22 May 2018 06:58 PM
அமெரிக்காவில் அரசுத்துறை செயலர் பதவி என்பது மற்ற நாடுகளின் அயலுறவு அமைச்சருக்கு இணையானது. அமெரிக்கச் செயலர் மைக் பாம்ப்பியோ ஈரான் மீது புதிய தடைகளை விதிப்போம் என்று சூளுரைத்ததையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர் இஸ்மாயில் கோசாரி அமெரிக்கா மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
ஈரானுடனான பன்னாட்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகினார். இதனையடுத்து வரலாறு காணாத பொருளாதாரத் தடைகள் ஈரான் மீது திணிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்களன்று பாம்ப்பியோ கூறும்போது, “டெஹ்ரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே வரவில்லையெனில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கும் என்று எச்சரித்தார்.
இதனையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர் இஸ்மாயின் கோசாரி, “ஈரான் மக்கள் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும், அமெரிக்க செயலர் பாம்ப்பியோவின் வாயிலேயே குத்த வேண்டும். அவர் மட்டுமல்ல அவரை ஆதரிப்பவர்கள் வாயிலும் குத்த வேண்டும்” என்று கூறியதாக ஈரான் லேபர் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் திறன்களைக் குறைப்பது அமெரிக்க செயலர் பாம்ப்பியோவுக்கு இடப்பட்ட முதல் கட்டளையாகும்.
“எங்களது கண்டம் விட்டு பாயும் ஏவுகணைகளை குறைக்கச் சொல்ல அமெரிக்கா யார்? வரலாற்றை உற்று நோக்கினால் ஹிரோஷிமா, நாகசாகியை அணுகுண்டு வீசித் தாக்கிய அமெரிக்காதான் உலகின் நம்பர் 1 கிரிமினல்” என்று கூறியுள்ளார் காட்டமாக.
ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் மொகமத் பாக்கர் நொபக்த் கூறும்போது, இஸ்ரேல் மற்றும் ஈரானிலிருந்து வெளியேறிய, தற்போது ஆயுதமேந்திய கலகக்கும்பல் முஜாஹிதீன்-இ-கலாக் (MKO) ஆகியவற்றைக் கையில் போட்டுக் கொண்டு ஈரானிய மக்களை அடக்கியாள்வதன் மூலம் அமெரிக்கா ஜனநாயகத்தை விரும்புகிறது என்று ஈரான் மக்கள் நம்பி விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT