Published : 18 Jul 2024 12:27 PM
Last Updated : 18 Jul 2024 12:27 PM

“ரஷ்யா உடனான எரிசக்தி உறவால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது” - செர்கீ லாவ்ரோவ்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ்

ஐக்கியநாடுகள் சபை: ரஷ்யா உடனான எரிசக்தி உறவுகளால் இந்தியா மிகப்பெரிய, முற்றிலும் நியாயமற்ற அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தலைமை வகிக்கும் நிலையில், மாஸ்கோவின் தலைமையின் கீழ் நடைபெறும் கவுன்சிலின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்க செர்கி லாவ்ரோவ் நியூயார்க் வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த செர்கீ லாவ்ரோவ், “இந்தியா ஒரு மிகப் பெரிய சக்தி. அது தனது தேசிய நலன்களின் அடிப்படையில் பார்ட்னர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு பெரிய சக்தி. ரஷ்யா உடனான அதன் எரிசக்தி ஒத்துழைப்பு காரணமாக இந்தியா, சர்வதேச அரங்கில் மிகப் பெரிய, முற்றிலும் நியாயமற்ற அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

மோடியின் ரஷ்ய பயணம் 'அனைத்து அமைதி முயற்சிகளின் முதுகில் குத்தும்' நடவடிக்கை என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கருத்து இந்தியாவை அவமதிக்கக்கூடியது, மிகவும் அவமானகரமானது. அவரது அந்த கருத்துக்காக, டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரை அழைத்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியா எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏன் அதிக எண்ணெய் வாங்குகிறது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். 'யாருடன் எப்படி வர்த்தகம் செய்வது, எப்படி தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பது என்பதை இந்தியாவே தீர்மானிக்கும். நாங்கள் ஒரு நாட்டிலிருந்து மட்டும் எண்ணெய் வாங்கவில்லை. பல மூலங்களிலிருந்து எண்ணெய் வாங்குகிறோம். இந்திய மக்களின் நலன்களுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்துக்குச் செல்வது விவேகமான கொள்கையாகும். அதையே நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்' என்று ஜெய்சங்கர் கூறி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

22-வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜூலை 8-9 தேதிகளில் ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர் மோடியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். 2022 ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x