Published : 17 Jul 2024 06:58 AM
Last Updated : 17 Jul 2024 06:58 AM
வாஷிங்டன்: கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தாமஸ் மேத்யூ என்பவர் ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.
மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார், சுதாரித்துக் கொண்டபாதுகாப்புப் படை வீரர்கள், தாமஸ்மேத்யூவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் எப்பிஐ போலீஸ்வட்டாரங்கள் கூறியதாவது:
தாமஸ் மேத்யூவின் செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறோம். அவரது வீட்டில் முழுமையாக சோதனை நடத்தி உள்ளோம். சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஒருநாள் முன்னதாக தாமஸ் மேத்யூ, பெத்தேல் பார்க் பகுதியில் உள்ள மைதானத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடையில் 50 குண்டுகளை வாங்கி உள்ளார். கட்டிடத்தில் ஏறுவதற்காக உயரமான ஏணியையும் வாங்கி உள்ளார்.
ட்ரம்ப் பேசிய மேடையில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மீது ஏணியின் உதவியுடன் ஏறிய தாமஸ் மேத்யூ, ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியால் ட்ரம்பை குறிவைத்து 8 குண்டுகளை சுட்டுள்ளார். இதில் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாமஸ் மேத்யூ குடியரசு கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். பெத்தேல் பார்க் பகுதியில் உள்ள ஓட்டலில் அவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை. எதற்காக அவர் ட்ரம்பை கொலை செய்ய முயன்றார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
தாமஸ் மேத்யூ துப்பாக்கியுடன் பிரச்சார கூட்டத்தில் நுழைந்தது எப்படி என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவர் பிரச்சார கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்குள் வரவில்லை. மைதானத்துக்கு வெளியே உள்ளகட்டிடத்தில் ஏறி, அங்கிருந்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதனால் பாதுகாப்புப் படையினரின் சோதனையில் சிக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சக மாணவர்கள் கூறும்போது, “தாமஸ் மேத்யூ எப்போதும் தனிமையில் இருப்பார். கணிதத்தில் அபாரஅறிவு கொண்டவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அமைதியானஅவர், மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்தனர். தாமஸ் மேத்யூ வசித்த பெத்தேல் பார்க் பகுதி மக்களும் இதே கருத்தை தெரிவித்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT