Published : 13 Jul 2024 11:48 PM
Last Updated : 13 Jul 2024 11:48 PM
ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் பெற்றது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சூழலில் தெற்கு இத்தாலி பகுதியில் கொத்தடிமைகள் போல பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விவகாரம் கவனம் பெற்றது. இதன் பின்னணியில் இந்தியர்கள் சிலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இத்தாலியில் இந்தியர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து இத்தாலி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 33 இந்தியர்களை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். மேலும், அவர்களை இதில் ஈடுபடுத்திய இருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.
அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வாரத்தில் 7 நாட்கள், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.360 கூலியாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் செலுத்தினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலம் அமைத்து தருவதாக கூறி இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த தொகையை முழுவதுமாக செலுத்தும் வரை இத்தாலியில் பணியாற்றும் அவர்களுக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படாது என்றும் தகவல். அவர்கள் சீசனல் வொர்க் பர்மிட்டில் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதோடு கூடுதலாக ரூ.13 லட்சம் செலுத்தினால் நிரந்தர வொர்க் பர்மிட் வழங்கப்படும் என்றும் இந்திய தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வமான குடியிருப்பு சான்று கிடைப்பதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை போலவே இத்தாலியிலும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதன் காரணமாக அங்கு சட்டத்துக்கு புறம்பாக அரசின் அனுமதி இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும். அவர்களின் பங்கு விவசாய பணியில் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT