Published : 12 Jul 2024 08:23 PM
Last Updated : 12 Jul 2024 08:23 PM
புதுடெல்லி: நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்த’ நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றது. இதையடுத்து, நேபாள காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார். இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12 ஆம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா நாடாளுமன்ற செயலகத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று (வெள்ளிகிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி (KP Sharma Oli) பிரதமராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் பதவியேற்ற 13-வது பிரதமர் தஹால் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT