Published : 12 Jul 2024 10:00 AM
Last Updated : 12 Jul 2024 10:00 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்கள் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என சொல்லி அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் பைடன் பங்கேற்றார். அப்போது ஜெலன்ஸ்கியை பேச அவர் அழைத்தார். அப்போது ‘புதின்’ என அவரை சொல்லி இருந்தார்.
“உக்ரைன் அதிபரை நான் அழைக்கிறேன். அவர் தைரியம் மிக்கவர் மற்றும் உறுதித்தன்மை கொண்டவர். அதிபர் புதினை வரவேற்கிறேன்” என பைடன் கூறினார். அதன் பின்னர் மேடையை விட்டு இறங்கிய போது தனது தவறை அறிந்து ‘அதிபர் புதினை ஜெலன்ஸ்கி வீழ்த்துவார்’ என தெரிவித்தார்.
அதே போல பத்திரிகையாளர் சந்திப்பில் துணை அதிபர் ட்ரம்ப் என சொல்லி இருந்தார். அவர் கமலா ஹாரிஸை இப்படிச் சொல்லி இருந்தார். இது அவரது கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்களை அதிர்ச்சி கொள்ள செய்தது.
அமெரிக்க அதிபர் 2024 தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். 81 வயதான அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. வயோதிகம், விவாதங்களில் பேசும் போது தடுமாறுவது, அறவே தொடர்பு இல்லாமல் பேசுவது, உடல் நலன் சார்ந்து இந்த விமர்சனங்கள் உள்ளன.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் ட்ரம்ப் உடன் விவாதம் மேற்கொண்டார். அப்போதும் அவரது பேச்சில் வேகம் இல்லை எனச் சொல்லப்பட்டது. அதற்கு பயணம் மற்றும் தூக்கமின்மையை காரணமாக சொல்லி இருந்தார் பைடன். அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடாது என சொந்தக் கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருந்தாலும் அந்த ரேஸில் தான் நீடிப்பதாக அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment